lundi 22 septembre 2014

ஸ்ரீநிவாசு மாண்டலின் என்ற வாத்திய பிறவிக்கலைஞனுக்கு அஞ்சலி

  தமிழ்த் திரையிசையில் மாண்டலின் என்ற வாத்தியம் பெரிதாகக் கோலோச்சாததாலோ என்னமோ அந்த வாத்தியத்தை தமிழ்த் திரியிசையில், கேட்டு ரசித்த அனுபவ பெரிதளவில் எனக்கில்லை. ஆனால் மாண்டலினைப்பற்றிய செய்திகள் ஏதாவதை எப்போதாவது பார்க்கும் போதெல்லாம் அங்கே ஸ்ரீநிவாசின் பெயரும் இடம்பெற்றிருக்கும். அதனால் மாண்டலினென்றால் ஸ்ரீநிவாசும் அவரின் முகமும் சேர்ந்தே என் நினைவில் வருவதுண்டு. . ஒருமுறை அவரின் ஆல்பம் ஒன்றை சிடிக் கடையொன்றில் கண்டு வாங்கியிருந்தேன் ஆனால் அது கர்னாடக இசை ஆல்பமாக இருந்ததால் பெரிதாக அதைக் கேட்டு ரசிக்க முடியவில்லை.
தென்றலே என்னைத் தொடு என்ற படத்தில் இடம்பெற்ற புதிய பூவிது பூத்தது என்ற பாடலுக்கு ஒரு சிறப்பு உண்டு. அந்தப்பாடலின் ஒலிப்பதிவன்று வயிலின் கலைஞர்களால் ஒலிப்பதிவுக் கூடத்துக்கு வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டதாம். ஆனால் அந்தப்பாடலைப் படம்பிடிப்பதற்காக வெளியூர் சென்றுவிட்ட இயக்குனர் ஸ்ரீதருக்கு பாடலை அனுப்பியே தீரவேண்டிய கட்டாயாம் மேஸ்ட்ரோவுக்கு. அதனால் அந்தப்பாடலில் வயிலின்களைப் பாவிப்பதற்குப் பதிலாக ராஜா மாண்டலின்களைப் பாவித்திருப்பாராம். அந்தப்பாடலின் பின்னணியிசையை உற்றுக் கேட்டால் அந்தச் சூட்சுமம் புரியும்.
அந்தப்பாடலுக்குப் பின்புதான் மாண்டலினைப்பற்றிய விளக்கமான அனுபவம் எனக்குக் கிடைத்ததென்றால் அது மிகையல்ல.
அதன்பின் எனக்குள் ஒரு வினாவும் எதிர்பார்ப்பும் இருந்து வந்தது. மேஸ்ட்ரோ ஏன் மாண்டலின் ஸ்ரீநிவாசை தனது பாடல்களில் ஒருமுறையேனும் பாவிக்கவில்லையென்ன்பதும் ஒருமுறையாவது பாவிக்க வேண்டுமென்பதே அது. ஸ்ரீநிவாஸ் மட்டும் மேஸ்ட்ரோவின் இசையில் ஒரு பாட்டுக்காவது மாண்டலின் வாசித்திருந்தால் கடைக்கோடி தமிழ் ரசிகனுக்கும் மாண்டலின் என்ற வாத்தியமும் அதன் இசையும் இன்னும் அருகில் சென்றிருக்கும். ஆனால் அதுதான் இறுதிவ்வரை நடக்காமல் போய்விட்டதே..
இப்போ மாண்டலின் என்ற வாத்தியம் ஒரு சாதாரண தமிழ் ரசிகனுக்கு இன்னும் அன்னியமாக... தொலைதூரம் போய்விட்டது.
மறைந்துவிட்ட அந்தப் பிறவிக்கலைஞனுக்கு அஞ்சலி செலுத்தும் இவ்வேளையில் மனதில் ஒரு எண்ணம் பளிச்சிடுகின்றது ..
உலகத் தரம் வாய்ந்த கர்னாடக சங்கீதக் கலைஞர்கள் தமிழ்த் திரையிசையில் பயன்படுத்தப்பட வேண்டும். அது திரையிசையில் இன்னும் பல புதிய பரிமாணங்களின் அறிஉகத்துக்கு வழியமைக்கும். அது
இசையமைப்ப்பாளர்களுக்கும்..
கலைஞர்களுக்கும்..
கடைக்கோடி ரசிகனுக்கும்,,
தமிழ்த் திரையிசைக்கும் மிக நல்லது !!    Kalaichelvan Rexy Amirthan

dimanche 21 septembre 2014

யாழை நோக்கிய யாழ் தேவியின் பயணமானது இலங்கையின் வரலாற்றின் பக்கங்களில் மீண்டும் எழுதப்படுகின்றது

யாழ்ப்பாணத்துக்கான ரயில் சேவை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. 

நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக 1990ஆம் ஆண்டுடன் அஸ்தமித்திருந்த வடக்குக்கான ரயில் சேவை, யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து ஓமந்தை, பளை, கிளிநொச்சி வரை படிப்படியாக விஸ்தரிக்கப்பட்டு தற்போது யாழ்ப்பாணம் வரை சேவை இடம்பெறவுள்ளது. 

இந்நிலையில், யாழ்ப்பாணத்துக்கான ரயில் சேவையை விஸ்தரிக்கும் பணிகள் பூர்த்தியாக்கப்பட்டு, இன்று (21)  பரீட்சார்த்த ரயில் சேவை இடம்பெறவுள்ளது. 

இன்று காலை 10 மணிக்கு பளையிலிருந்து ஆரம்பமாகும் பரீட்சார்த்த புகையிரதம், 10.30 மணிக்கு யாழ்ப்பாண புகையிரத நிலையத்தை வந்தடையும் என புகையிரத திணைக்களம் தெரிவித்தது. 

தொடர்ந்து ஒக்டோபர் 13ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கான ரயில் சேவைகள், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படும் என்று புகையிரத திணைக்களம் மேலும் தெரிவித்தது. 

தமிழ் பெண்கள் படையணி, பொறியியல் படையணி, பொதுப் படையணி பயிற்சிகளை முடித்து வெளியேறியுள்ளது

யாழ். காங்கேசன்துறையில்  அமைந்துள்ள படைத்தளத்தில் இடம்பெற்ற அணிவகுப்பு மரியாதையுடன் பயிற்சிகளை முடித்து வெளியேறியுள்ளது. பெண்கள் படையணி, பொறியியல் படையணி, பொதுப் படையணி என்பவற்றில் இணைக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் தமிழ் இராணுவத்தினரின் அணிவகுப்பு மரியாதையை கொழும்பு படைத்தலைமையகத்தின் படை அதிகாரி மேஜர் ஜெனரல் அமங்கபொல மற்றும் யாழ் மாவட்ட படைகளின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் உதய பெரொ ஆகியோர் ஏற்றுக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து இராணுவப் படையணியின் நாய்களின் சாகச நிகழ்ச்சி, இராணுவ பொலிஸாரின் மோட்டார் சைக்கிள் சாகச நிகழ்ச்சி, பொறியில் பிரிவினரின் செயல்திறன் செயல்பாடுகள், பெண்கள் படையணியினரின் கராத்தே கண்காட்சி மற்றும் இராணுவ பாண்ட் அணியினரின் பாண்ட் இசை அணிவகுப்பு நிகழ்ச்சி என்பனவும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் மத குருமார்கள், யாழ். மாவட்ட திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், கிராம அலுவலர்கள், பல ஆயிரக்கணகான பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

குடு லாலிதவின் சொத்துக்கள் அரசுடமை!

அத்துருகிரிய, ஒருவல பகுதியில் வைத்து கடந்த 5ஆம் திகதி பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த 'குடு லாலித' என்றழைக்கப்படும் விதான முதியன்சலாகே லாலித்ய கௌசல்யவின் 685 இலட்சம் ரூபாய் பெறுமதியான அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அனைத்தும் அரசுடைமையாக்கப்பட்டுள்ளன.

போமிரிய, கொரதொட்ட மற்றும் தலங்கம பிரதேசங்களிலுள்ள அதி சொகுசுவாய்ந்த வீடுகள், ரணாலையில் உள்ள காணி, 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான கார், 45 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு வாகனங்கள் என்பன இந்த சொத்துக்களில் அடங்குகின்றன.

ஊவா மாகாணசபை தேர்தல் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றிகொண்டுள்ளது

பதுளை, மொனராகலை ஆகிய இரு மாவட்டங்களையும் உள்ளடக்கிய ஊவா மாகாண சபையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றிகொண்டுள்ளது.

தேர்தல்கள் திணைக்களத்தினால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ள பெறுபேறுகளின் பிரகாரம்,

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 349,906 வாக்குகள்   51.25 சதவீதம்  (2 போனஸ் ஆசனங்கள் அடங்களாக 19 ஆசனங்கள்)

ஐக்கிய தேசிய கட்சி - 274,773 வாக்குகள் 40.24 சதவீதம்  ( 13 ஆசனங்கள்)

மக்கள் விடுதலை முன்னணி 36,580 வாக்குகள 5.36 சதவீதம்  ( 2ஆசனங்கள்)

2009 ஆம் ஆண்டு  இறுதி முடிவு

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 418,906  72.39 (2 போனஸ் ஆசனங்கள் அடங்களாக 25 ஆசனங்கள்)

ஐக்கிய தேசிய கட்சி - 129,144 வாக்குகள் சதவீதம் 22.32 சதவீதம் ( 7 ஆசனங்கள்)

மக்கள் விடுதலை முன்னணி 14,639 வாக்குகள 2.53 சதவீதம்  ( 1ஆசனம்)

மலையக மக்கள் முன்னணி 9,227 வாக்குகள 1.59 சதவீதம்  ( 1ஆசனம்)

தீவிரவாதிகள் சுட்டதில் 23 பேர் சாவு நைஜீரியாவில் மார்க்கெட்டில்

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கடந்த 2009–ம் ஆண்டு முதல் ‘போகோஹாரம்’ என்ற அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். ஆயிரக்கணக்கான பொது மக்களை கொன்று குவிக்கின்றனர். வட கிழக்கு நைஜீரியாவில் இவர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். சமீபத்தில் இப்பகுதியில் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களை கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
இந்த நிலையில்  அங்குள்ள மைனோக் என்ற நகருக்குள் தீவிரவாதிகள் புகுந்தனர். அங்கு நகரின் மையப் பகுதியில் உள்ள மார்க் கெட்டுக்குள் நுழைந்தனர். அப்போது அங்கு மக்கள் கூட்டம் அதிகம் இருந்தது.
உடனே மக்கள் மீது தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். அதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவ வீரர்களும் பதிலுக்கு சுட்டனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. எனவே, அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. பொதுமக்கள் அங்குமிங்கும் ஓட்டம் பிடித்தனர். இந்த துப்பாக்கி சூட்டில் 36 பேர் பலியாகினர். அவர்களில் 23 பேர் பொது மக்கள்.
மீதமுள்ள 13 பேர் தீவிரவாதிகள் ஆவர். தீவிரவாதிகளின் தாக்குதலை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த வடக்கு பகுதியில் உள்ள போர்னோ, யோப், அதமாவா ஆகிய மாகாணங்களில் கடந்த ஆண்டு முதல் அதிபர் குட்லக் ஜோனாதன் அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார்.

கள்ள ஒட்டு மோசடி! பிரிட்டனின் பித்தலாட்டம் ஸ்காட்லாந்து வாக்கெடுப்பில்!!

 இலங்கை, இந்தியா போன்ற மூன்றாமுலக நாடுகளில் மட்டும் தான், தேர்தலில் கள்ள ஒட்டு போடுவார்கள் என்று நினைக்கிறீர்களா? "வளர்ச்சி அடைந்த", "ஜனநாயக" மேற்கத்திய நாடுகளிலும் அது தாராளமாக நடக்கிறது.  ஸ்காட்லாந்து பொது வாக்கெடுப்பில், பிரிட்டிஷ் அரசுக்கு சார்பான முடிவுகளைப் பெறுவதற்காக, கள்ள ஒட்டு போடப் பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. வாக்குச் சீட்டு எண்ணுபவர்களே கள்ள ஓட்டுப் போட்டுள்ளனர். ஆஹா! இதுவன்றோ ஜனநாயகம்!

ஸ்காட்லாந்து பிரிந்து தனி நாடாவதற்கான பொது வாக்கெடுப்பு, கடந்த 18 செப்டம்பர் இடம்பெற்றது. வாக்கெடுப்புக்கு முன்னர், பிரிவினைக்கு ஆதரவாக "ஆம்" என்று வாக்களிக்க விரும்புவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப் பட்டது. பிரிந்து சென்றால் பொருளாதார ரீதியாக பல பின்னடைவுகள் ஏற்படும் என்று பயமுறுத்தல்கள் வந்த படியால், "இல்லை" என்று வாக்களிக்க விரும்புவோர் எண்ணிக்கை அதிகரித்தது. இறுதியில், ஸ்காட்லாந்து பிரிவினைக்கு எதிரானவர்கள் வென்றதாக அறிவிக்கப் பட்டது.

ஸ்காட்லாந்து வாக்கெடுப்பு ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை. பல முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் வருகின்றன. பிரிவினைக்கு எதிரான, "இல்லை" ஓட்டுக்களில் பல, கள்ள ஓட்டுகளாக போடப் பட்டிருக்க வாய்ப்புண்டு. இங்கேயுள்ள வீடியோவில் அதற்கான ஆதாரங்கள் பதிவாகி உள்ளன. வாக்குச் சீட்டுகளை எண்ணுமிடத்தில், பல "ஆம்" ஓட்டுகள், "இல்லை" ஓட்டுகளுடன் சேர்த்து எண்ணப் பட்டுள்ளன. வாக்குச் சீட்டு எண்ணும் நிலையத்தில் இருந்தவர்களே கள்ள ஒட்டு போட்டுள்ளனர். அதுவும், இந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. 
மேற்கத்திய நாடுகளில் ஜனநாயகம் என்பது, பொது மக்களை ஏமாற்றுவதற்கான ஒரு மோசடி நாடகம். அமெரிக்காவில் 2000 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதித் தேர்தலில், நிறைய முறைகேடுகள் நடந்த படியால், உலகமே அமெரிக்காவின் ஜனநாயகத்தை பார்த்து கை கொட்டிச் சிரித்தது. கள்ள ஓட்டுகள் காரணமாக, புளோரிடா மாநிலத்தில் வாக்குகள் எண்ணும் பணி திரும்பத் திரும்ப நடந்து கொண்டிருந்த படியால், முடிவுகள் ஒரு மாதத்திற்கு தள்ளி வைக்கப் பட்டது. குடியரசுக் கட்சி சார்பில் ஜோர்ஜ் புஷ்ஷும், ஜனநாயகக் கட்சி சார்பில் அல் கோரும் போட்டியிட்டார்கள். தேர்தலில் பெரும்பான்மை வாக்காளர்கள் அல் கோருக்கு வாக்களித்திருந்த போதிலும், ஜோர்ஜ் புஷ் ஜனாதிபதியாக தெரிவானார். அமெரிக்க ஜனாதிபதி, மக்களால் தெரிவு செய்யப் படுவதில்லை என்ற உண்மையை, அன்று தான் உலகம் முழுவதும் அறிந்து கொண்டது.


உலகில் எந்தவொரு தேசிய இன விடுதலைக்கான இயக்கத்தினதும் பின்னால், ஏழை உழைக்கும் வர்க்க மக்களின் பொருளாதாரப் பிரச்சினைகள் மறைந்திருக்கும். ஈழம் மட்டுமல்ல, ஸ்காட்லாந்திலும் அது தான் உண்மை. ஸ்காட்லாந்து சுதந்திரத்திற்கான பொது வாக்கெடுப்பில், வர்க்க வேறுபாடு துலக்கமாகத் தெரிகின்றது. ஏழை மக்கள் வாழும் பிரதேசங்களில் பெரும்பான்மையினர் "ஆம்" என்றும், மத்தியதர, மேல்தட்டு வர்க்க மக்கள் வாழும் பிரதேசங்களில் பெரும்பான்மையினர் "இல்லை" என்றும் வாக்களித்துள்ளனர். குறிப்பாக, ஏழை உழைக்கும் வர்க்க மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட கிளாஸ்கவ் நகரில், கூடுதலான ஆதரவு வாக்குகள் கிடைத்துள்ளன.
மேற்கத்திய நாடுகள் தேர்தல் ஜனநாயகத்தை விரும்புவதற்கு காரணம், அதன் முடிவுகளை விரும்பியவாறு மாற்றிக் கொள்ளலாம். பெரும் மூலதனத்தை கொண்டுள்ள முதலாளிகளின் விசுவாசம் எந்தப் பக்கம் உள்ளது என்பது மட்டுமே முக்கியம். அது தான் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கிறது. மக்களின் கருத்துக்களை கட்டமைக்கும் வல்லமை பொருந்திய ஊடகங்கள் அவர்களின் கைகளில் இருக்கின்றன.
இந்த வாக்கெடுப்பின் முடிவில், ஸ்காட்லாந்து சுதந்திரத்திற்கு ஆதரவான சக்திகள் தோல்வியடைந்து விட்டதாக கருதுவது அபத்தமானது. உண்மையில் அவர்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது. "இல்லை" என்று வாக்களித்தால், மாநில சுயாட்சியும், அதிகாரப் பரவலாக்கலும் தருவதாக, பிரிட்டிஷ் அரசு வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும். தனி அரசு அமைப்பது ஒரு தூர நோக்கிலான இலட்சியமாக இருக்கலாம். ஆனால், நிகழ்காலத்தில் நடைமுறைச் சாத்தியமான அதிகாரப் பகிர்வை ஏற்றுக் கொள்ள வேண்டி இருக்கும். அனேகமாக, உலகில் உள்ள எல்லா தேசியவாத அமைப்புகளின் அரசியல் அது தான்.

சுயநிர்ணய உரிமை என்றால், பிரிந்து சென்று தனி அரசு அமைப்பது என்ற அர்த்தம் இல்லை. இந்த உண்மையை, புலிகளின் அரசியல் ஆலோசகராக இருந்த காலஞ்சென்ற அன்டன் பாலசிங்கம் உணர்ந்திருந்தார். "தமிழீழம் பிரிந்து செல்வதை, எந்தக் காலத்திலும் சிங்களவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நாங்கள் பிரிவினையை உச்ச பட்ச கோரிக்கையாக வைத்திருப்போம். அதிக பட்சம் அதிகாரப் பரவலாக்கலுடன் மாநில சுயாட்சி பெற்றுக் கொள்ள முடியும்." புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவில் இருந்தவர்களிடம் அன்டன் பாலசிங்கம் அவ்வாறு கூறி இருந்தார். இறுதி யுத்தத்திற்கு முன்னர், தாய்லாந்தில் நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளிலும் அன்டன் பாலசிங்கம் அந்த உண்மையை ஏற்றுக் கொண்டிருந்தார்.                                             ..... கலையகம்

samedi 20 septembre 2014

திருக்குறள் அரபு. சீன, மொழிகளில் உளக‌ தமிழ் வளர்ச்சிக்காக திட்டங்கள்

திருக்குறள் சீன மற்றும் அரபு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு விரைவில் வெளியிடப்பட உள்ளது. தமிழ் அறிஞர்கள் தமிழில் எழுதிய அறிவுரைகள், கவிதைகள் போன்றவற்றை உலகிலேயே அதிகமாக பேசப்படும் மொழிகளில் மொழிபெயர்ப்பதை தமிழக அரசு கொள்கையாக கொண்டு செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள், பாரதியார், பாரதிதாசனின் கவிதைகள் மற்றும் புகழ்பெற்ற தமிழ் நூல்களை ஆங்கிலம், சீனம், அரபி மொழிகள் மற்றும் உலகில் அதிகம் பேசப்படும் மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடுவதற்கான அறிவிப்பு 2011௧2ம் ஆண்டு சட்டசபை கவர்னர் உரையில் வெளியிடப்பட்டது.
தயார் நிலையில்
அதைத் தொடர்ந்து அதற் கான அரசாணை உடனே பிறப்பிக்கப்பட்டு அவற்றை மொழியாக்கம் செய்யும் பணி தொடங்கப்பட்டது. சீன மொழியில் இதற்கான தகுதியுள்ள நபராக சீனக் கவிஞர் யூஷி தேர்வு செய்யப்பட்டார். ஏற்கனவே தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டிருந்த திருக்குறளை ஆதாரமாகக் கொண்டு யூஷி அதை சீன மொழியில் மொழியாக்கம் செய்தார்.
தற்போது அந்த சீன திருக்குறள் புத்தகம் அச்சிடப்பட்டு, வெளியிடுவதற்கு தயார் நிலையில் உள்ளது. முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அணிந்துரை பெறப்பட்டதும் அது வெளியிடப்படும். ஒரே புத்தகத்தில் தமிழ், ஆங்கிலம், சீன மொழிகளில் திருக்குறளை படிக்கலாம்.
அதுபோல் தேர்ந்தெடுக்கப்பட்ட பாரதியாரின் பாடல்களையும் ஆங்கிலத்தில் இருந்து யூஷி சீன மொழியில் மொழியாக்கம் செய்துள்ளார். அதுவும் வெளியிடுவதற்கு தயார் நிலையில் உள்ளது.
அரபி மொழியாக்கம்
திருக்குறள் மற்றும் பாரதியார் பாடல்களை அரபி மொழியில் மொழியாக்கம் செய்யும் பணியில் சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் மலேசியாவில் உள்ள பல்கலைக்கழக பேராசிரியர் நியமிக்கப்பட்டனர். தற்போது மொழியாக்கம் செய்யப்பட்டுள்ள அந்த நூல்களும் வெளியிடுவதற்கு தயார் நிலையில் உள்ளன.
இன்னும் ஓரிரு மாதங்களில் அந்த புத்தகங்கள் வெளியிடப்படலாம் என்று தமிழ் வளர்ச்சித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுபோன்ற நடவடிக்கைகளால், தமிழறிஞர்கள், தமிழ் மொழியின் பெருமையை உலகின் மற்ற மக்களும் தெரிந்துகொள்ள இது வழிவகை செய்யும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
தமிழ் வளர்ச்சி இயக்ககம்
திருக்குறளை சீன மொழியில் மொழிபெயர்த்து வெளியிடுவதற்காக தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு முதற்கட்டமாக ரூ.41.70 லட்சம் ஒப்பளிக்கப்பட்டது. இதை அச்சிட்டு வெளியிடும் பணியை தமிழ் வளர்ச்சி இயக்ககம் மேற்கொண்டுள்ளது.
இதுபோல பாரதிதாசனின் பாடல்களும் இந்த மொழிகளில் மொழியாக்கம் பெற்றுள்ளது. வரும் ஆண்டில் இதுவும் வெளியிடப்பட்டு, தமிழ் மொழியின் பெருமை உலகுக்கு காட்டப்படும்.
உயர்த்தப்பட்ட பரிசுத் தொகை
இதுமட்டுமல்லாமல், தமிழ் வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அரசு மேற்கொண்டு வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளுக்கான முதல் பரிசுத்தொகை (மாவட்ட அளவில்) ஆயிரம் ரூபாயில் இருந்து 10 ஆயிரம் ரூபாயாகவும், மாநில அளவிலான முதல் பரிசுத் தொகை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கப்பட்டு வருகின்றன. இரண்டாம், மூன்றாம் பரிசுகளும் உயர்த்தி வழங்கப்படுகின்றன.
அதுபோல் தமிழறிஞர்களை ஊக்குவிப்பதற்காக புதிய விருதுகளையும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். 2012௧3-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட பட்ஜெட் அறிவிப்பில், ‘பெரும் தமிழறிஞர்களுக்கு கபிலர் விருது, உ.வே.சா. விருது, என்ற புதிய விருதுகளும், தமிழ் மொழி வளர்ச்சிக்காக அருந்தொண்டாற்றும் தமிழ் அமைப்புகளுக்கு தமிழ்த்தாய் விருதும் வழங்கப்படும்’ என்று அறிவிக்கப்பட்டது.
இதை நிறைவேற்றும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டு, மதுரை தமிழ்ச் சங்கத்துக்கு தமிழ்த்தாய் விருதும், அ.அ.மணவாளனுக்கு கபிலர் விருதும், புலவர் செ.ராசுவுக்கு உ.வே.சா. விருதும் வழங்கப்பட்டன.
கம்பர் விருது
2013௧4-ம் ஆண்டு சட்டசபை கவர்னர் உரையில், ‘‘புதிதாக இந்த ஆண்டில் இருந்து கம்பராமாயணத்தின் உயரிய கருத்துக்களை பரப்பும் சிறந்த அறிஞருக்கு கம்பர் விருதும், சிறந்த இலக்கியப் பேச்சாளருக்கு சொல்லின் செல்வர் விருதும் வழங்கப்படும்’’ என்று அறிவிக்கப்பட்டது.
அறிவிக்கப்பட்ட உடனேயே அரசாணை வெளியிடப்பட்டு பாலரமணிக்கு கம்பர் விருதும், ப.லோகநாயகிக்கு சொல்லின் செல்வர் விருதும் வழங்கப்பட்டன. இப்படி தமிழ் வளர்ச்சிக்காக பல்வேறு புதிய விருதுகளை இந்த அரசு அறிவித்து, உடனே அதை நிறைவேற்றி வருகிறது.
2013௧4-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டு இருந்த, ஜி.யு.போப் விருது, உமறுப் புலவர் விருது, முதல்-அமைச்சர் கணினித் தமிழ் விருதுகள், பாராளுமன்றத் தேர்தல் நடந்ததால் வழங்கப்படவில்லை.
தமிழ்த்தாய்க்கு சிலை
சட்டசபையில் விதி 110-ன் கீழ் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, ‘தமிழ்த்தாய்க்கு சிலை அமைக்கப்படும்’ என்ற அறிவிப்பை வெளியிட்டார். தற்போது சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் அந்த சிலையை அமைக்கும் பணியை அரசு மேற்கொண்டு வருகிறது.
தமிழ் பல்கலைக்கழகத்திற் கான கட்டிடங்களை, ‘த,மி,ழ், நா,டு’ என்ற வடிவில் அமைப்பதற்காக, புதிதாக ‘த’ மற்றும் ‘நா’ வடிவில் கட்டிடங்கள் ரூ.15 கோடி செலவில் கட்டப்படும் என்று கடந்த ஜூலை 25-ந் தேதி சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். இதை நிறைவேற்றுவதற்காக கருத்துரு, அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
வளர்ச்சிப் பாதையில்
தமிழ் வளர்ச்சிக்கு அரசு காட்டும் ஆர்வம் குறித்து உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘இளம் தமிழர் இலக்கியப் பட்டறை, புதிய வகைப்பாடுகளான மகளிர் இலக்கியம், தமிழர் வாழ்வியல், தமிழ் வளர்ச்சித் துறைக்கு தனி வலைத்தளம் போன்ற எண்ணற்ற அறிவிப்புகளை அரசு வெளியிட்டது. அவற்றை உடனுக்குடன் நிறைவேற்றி, தமிழ் மொழியை வளர்ச்சிப் பாதையில் அரசு கொண்டு செல்கிறது’’ என்றார்.

vendredi 19 septembre 2014

சர்வதேச மாநாடு மஹிந்த உரை அனைத்து நாட்டு பயங்கரவாதிகளும் ஒரேவிதமானவர்களே

அனைத்து பயங்கரவாதிகளும் ஒரேவிதமானவர்களே – ஜனாதிபதி:-அனைத்து பயங்கரவாதிகளும் ஒரே விதமானவர்கள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவத்துள்ளார்.

ஆசிய அரசியல் கட்சிகளின் 8ம் சர்வதேச மாநாடு இன்றைய தினம் கொழும்பு தாமரைத் தடாகம் மஹிந்த ராஜபக்ஸ அரங்கில் ஆரம்பமானது.

இந்த ஆரம்ப நிகழ்வில் பங்கேற்ற போது ஜனாதிபதி இதனைத் தெரிவத்துள்ளார்.

அனைத்து பயங்கரவாதிகளும் அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்யவே தயாராகின்றனர் எனஅவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பது தொடர்பிலான அனுபவங்களை இலங்கை பகிர்ந்து கொள்ளத் தயார் எனஅவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடு பிரதானமாக எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளின் போது பேதங்களை களைந்து அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

இறுதி முடிவு ஸ்காட்லாந்த் பிரிட்டனில் இருந்து பிரிந்து செல்லக்கூடாது

பிரிவினைக்கு எதிராக 55.30% வாக்குகளும் பிரிவினைக்கு ஆதரவாக 44.70% வாக்குகளும் பதிவாகியிருக்கின்றன.
ஸ்காட்லாந்தில் மொத்தமுள்ள 32 உள்ளூராட்சிப்பிரதேசங்களின் அதிகாரப்பூர்வ முடிவுகளும் வெளியாகிவிட்டன. மொத்தமுள்ள 32 உள்ளூராட்சிப்பிரதேசங்களில், டண்டி, கிளாஸ்கோ, நார்த் லங்கன்ஷெர் மற்றும் வெஸ்ட் டன்பர்ட்டன்ஷெர் ஆகிய நான்கு பிரதேசங்களில் மட்டுமே ஸ்காட்லாந்து தனிநாடாக பிரிந்து செல்லவேண்டும் என்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.மீதமுள்ள 28 உள்ளூராட்சி மன்றங்களின் வாக்காளர்களின் பெரும்பான்மையானவர்கள் ஸ்காட்லாந்து பிரிந்து செல்லக்கூடாது என்றே வாக்களித்திருந்தனர். இதில் ஸ்காட்லாந்தின் தலைநகர் எடின்பரா வாக்காளர்களும் பிரிவினைக்கு எதிராகவே வாக்களித்திருந்தனர். எடின்பரா வாக்காளர்களில் 61.10 சதவீதம் பேர் ஸ்காட்லாந்து பிரிவினைக்கு எதிராக வாக்களித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதி முடிவுகளின்படி ஸ்காட்லாந்த் பிரிட்டனில் இருந்து பிரிந்து செல்லக்கூடாது என்று 20,01,926 பேரும், ஸ்காட்லாந்து பிரிட்டனில் இருந்து பிரிந்து செல்லவேண்டும் என்று 1,617,989 பேரும் வாக்களித்திருந்தனர். இரு தரப்பாருக்கும் இடையில் 3,83,937 வாக்குகள் வித்தியாசம் இருக்கின்றன.
இந்த தேர்தல் முடிவுகள் குறித்து முன்பு எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருந்ததைவிட, பிரிவினையை எதிர்ப்பவர்களின் வாக்கு சதவீதம் கணிசமாக அதிகரித்திருப்பதை இன்று வெளியான இறுதிமுடிவுகள் காட்டுகின்றன.நேற்று வியாழக்கிழமை ஸ்காட்லாந்து முழுவதும் நடந்த இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாக்குப்பதிவில் வாக்களிக்க தகுதிபெற்ற மொத்த வாக்காளர்கள் 42,83,392 பேர். இதில், 84.59 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. ஸ்காட்லாந்தின் வாக்குப்பதிவு வரலாற்றில் மிக அதிக சதவீத வாக்குப்பதிவாக கருதப்படும் இந்த கருத்தெடுப்பில் 3,429 வாக்குகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டுள்ளன.
நேற்றைய கருத்தறியும் வாக்கெடுப்பு நடந்து முடிந்த பின்னர் வெளியான யுகவ் நிறுவன எக்ஸிட் வாக்கெடுப்பு ஒன்று பிரிந்து போகவேண்டாம் என்ற தரப்புக்கு 54 சதவீத ஆதரவும், சுதந்திரம் கோரும் தரப்புக்கு 46 சதவீத ஆதரவும் இருப்பதாகக் கூறியிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.....ஸ்காட்லாந்துக்கு அதிகார பகிர்வளிக்க பிரிட்டனின் மூன்று முக்கிய கட்சிகளும் ஒப்புக்கொண்டுள்ளன

ஸ்காட்லாந்துக்கான அதிகார பகிர்வு தொடர்பான சட்டமுன்வடிவு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 27 ஆம் தேதிக்குள் நிறைவேற்றப்படும் என்று பிரிட்டனின் மூன்று கட்சிகளும் கூட்டாக உறுதியளித்திருந்ததை நினைவுபடுத்திய அலெக்ஸ் சால்மண்ட், அதற்கான நடவடிக்கைகளை பிரிட்டிஷ் அரசு உடனடியாக துவங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

jeudi 18 septembre 2014

பிரிட்டன் ஒன்றியத்திலிருந்து பிரிவது குறித்த ஸ்கொட்லாந்து சர்வஜன வாக்கெடுப்பு

இங்கிலாந்துடனான ஒன்றியத்தில் இருந்து தனி நாடாக சுதந்திரம் பெறுவதை தீர்மா னிக்கும் ஸ்கொட்லாந்து சர்வஜன வாக் கெடுப்பு இன்று வியாழக்கிழமை இடம்பெற வுள்ளது. இதனையொட்டி சுதந்திரத்திற்கு ஆதரவான மற்றும் எதிரான இரு முகாம் களும் நேற்று இறுதி நாள் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டன.
புதிய கருத்துக் கணிப்புகளின்படி சுதந்திரத்திற்கு ஆதரவு மற்றும் எதிரான வாக்குகள் மிக நெருக்கமாக இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. எனினும் சிறு இடை வெளியில் ஸ்கொட்லாந்து பிரிந்து செல்வ தற்கு மக்கள் எதிராக இருப்பதாகவும் குறிப்பிடத்தக்க வாக்காளர்கள் இன்னும் எதற்கு வாக்களிப்பது என்று தீர்மானிக்க வில்லை என்றும் தெரியவந்துள்ளது.
இன்று இடம்பெறும் சர்வஜன வாக் கெடுப்பில் ~~ஸ்கொட்லாந்து சுதந்திர நாடாக இருக்க வேண்டுமா?" என்று கேட்கப்பட்டு வாக்காளர்கள் ஆம் அல்லது இல்லை என்று பதிலளிக்கவுள்ளனர். இந்த வரலாற்று வாய்ப்பை பயன்படுத்தி இங்கிலாந்துடனான 307 ஆண்டு ஒன்றியத் திற்கு முடிவுகட்டுங்கள் என்று ஸ்கொட் லாந்து சுதந்திரத்திற்கு ஆதரவாக பிரசாரம் நடத்தும் ஸ்கொட்லாந்து முதலமைச்சர் அலக்ஸ் சல்மொன்ட் கோரியுள்ளார்.
"வெள்ளிக்கிழமை காலை ஒரு சிறந்த நாட்டின் முதல் நாளில் விழித்தெழுங்கள். இவ்வாறு விழித்தெழும்போது இந்த மாற்றத்தை நீங்கள்தான் செய்தீர்கள் என்று உணர்வீர்கள்" என சல்மொன்ட் ஸ்கொட் லாந்து மக்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். "இது உங்களது நாட்டின் எதிர்காலத்தை உங்கள் கையில் எடுக்கும் சந்தர்ப்பமாகும். எமது கைகளில் இருந்து இந்த வாய்ப்பை நழுவவிட்டுவிட வேண்டாம். இதனை எமக்கு செய்ய முடியாது என்று அவர்களை சொல்ல வைத்துவிடாதீர்கள்" என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஸ்கொட்லாந்து பிரிவதற்கு எதிராக பிரசாரம் நடத்தும் முகாமிற்கு தலைமை வகிப்பவர்களில் ஒருவரான பிரிட்டன் முன்னாள் நிதியமைச்சர் அலிஸ்டயர் டார் லின், சுதந்திரத்தை நிராகரிப்பது ஸ்கொட் லாந்து ஐக்கிய இராச்சியத்திற்குள் இருந்து வேகமான மற்றும் சிறந்த மாற்றத்திற்கு வாய்ப்பை ஏற்படுத்தும் என்றார். சர்வஜன வாக்கெடுப்பில் சுதந்திரத்திற்கு எதிராக பிரசாரத்தில் தீவிரம் காட்டும் பிரிட்டனின் 3 பிரதான அரசியல் கட்சிகளும் ஸ்கொட்லாந்து அரசுக்கு அதிக அதிகாரங் களை வழங்க வாக்குறுதி அளித்துள்ளன.
இறுதியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட மூன்று பத்திரிகை களினதும் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு களில் சிறு இடைவெளியில் சுதந்திரத்திற்கு எதிராக மக்கள் ஆதரவு இருப்பது தெரியவந் துள்ளது. இன்னும் குறிப்பிடத்தக்க மக்கள் எதற்கு வாக்களிப்பது என்பதை தீர்மா னிக்காமல் உள்ளனர். இவர்களின் வாக்கு இறுதி முடிவில் தீர்க்கமானதாக இருக்கும் என கருதப்படுகிறது. "இந்த வாக்கெடுப்புகள் மற்றும் அண் மைய கருத்துக்கணிப்புகள் அனைத்தும் நாம் இடைவெளியை தொட்டு வியாழக் கிழமை வெற்றிபெறுவோம் என்பதை காட்டு கிறது" என்று ஸ்கொட்லாந்து சுதந்திர ஆதரவு பிரசார முகாமின் நிறைவேற்று அதிகாரி பிளையர் ஜங்கின்ஸன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது ஒரு கத்திமுனை வாக்கெடுப்பாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். வாக்களிக்க அனுமதிக்கப்பட்டவர்களில் அதிக பெரும்பாலானவர்கள் வாக்குச் சாவடி களுக்கு வருவார்கள் என எதிர்பார்க் கப்படுகிறது. அனைத்து கணிப்புகளையும் பார்க்கும் போது வாக்குப்பதிவு 80 வீதத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று தலைமை வாக்கு எண்ணும் அதிகாரி மேரி பிட்கைத்லி குறிப்பிட்டுள்ளார். இவரே நாளை வெள்ளிக் கிழமை தேர்தல் முடிவை உத்தியோக பு+ர்வமாக அறிவிக்கவுள்ளார். சுமார் 4.3 மில்லியன் வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதோடு இதில் சுமார் 97 வீதமானவர்கள் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் ஆவர்.
ஸ்கொட்லாந்து பிரிந்து செல்வதற்கு எதிராக பிரசாரம் நடத்துவோர் நேற்றைய தினத்தை ஐக்கியத்தின் தினமாக பிரகடனம் செய்தனர். இவர்கள் ஸ்கொட்லாந்துக்கு வெளியில் பெல்பாஸ்ட், லண்டன் மற்றும் மான்செஸ்டர் நகரங்களில் பேரணி நடத்தியுள்ளனர். இதனிடையே ஸ்கொட்லாந்து சர்வஜன வாக்கெடுப்பையொட்டி பிரிட்டன் பிரதமர் டேவிட் கெமரூனின் பிரசார செயற் பாடுகளுக்கு பெரும் அதிருப்தி நிலவி வருகிறது. ஸ்கொட்லாந்து சர்வஜன வாக் கெடுப்பில் சுதந்திரத்திற்கு பெரும்பான்மை ஆதரவு கிடைத்தால் பிரதமர் கெமரூன் பதவி விலகவேண்டும் என்று பிரிட்டன் பாராளுமன்றத்தின் பல உறுப்பினர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
பிரிட்டனிலிருந்து ஸ்கொட்லாந்து பிரிந்து தனி நாடாகுமானால், அது மிகவும் வேதனையளிக்கக் கூடிய பிரிவினையாக இருக்கும் என்று பிரிட்டன் பிரதமர் டேவிட் கெமரூன் குறிப்பிட்டுள்ளார். ஸ்கொட் லாந்தின் பிரிவினைக்கு எதிராக உரை யாற்றிய கெமரூன் மேலும் கூறும்போது, "பிரிட்டனின் பகுதியாக ஸ்கொட்லாந்து தொடர வேண்டும் என எங்களுடைய இதயம் கூறுகிறது. ஆனால் தனி நாடாக வேண்டும் என்ற முடிவு ஏற்படுமானால், அது சோதனை முறையிலான தாற்காலிகப் பிரிவாக இருக்காது. பிரிவினை என்பது மிகுந்த வேதனையளிக்கும்.
இந்தப் பகுதியினரின் ஓய்வு+தியம் முதல் நாணய அலகு வரை ஏராளமான பொருளாதார விடயங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும். நமது இராணுவம் துண்டா டப்படும். இரு நாடுகளுக்கும் இடையே உருவாகும் புதிய எல்லைக்கோட்டைக் கடப்பது எளிதல்ல என்ற நிலை உருவாகும். சுதந்திர நாடு என்ற கரைந்து போய்விடக் கூடிய கனவை ஸ்கொட்லாந்து மக்கள் ஏற்கக் கூடாது என விரும்புகிறேன" என்றார். ஆரம்பகாலத்தில் தனி நாடாக இருந்து வந்துள்ள ஸ்கொட்லாந்து, 1603ஆம் ஆண்டு முதல் பிரிட்டன்; முடியாட்சியின் கீழ் வந்தது. 1707ஆம் ஆண்டு இங்கிலாந்துடன் ஏற்பட்ட உடன்படிக்கையின் கீழ் பிரிட்டனின் ஒரு பகுதியான பின்னர், ஸ்கொட்லாந்து பாராளுமன்றம்; முடிவுக்கு வந்தது.
அதே வேளையில், சட்டம், கல்வி, மத அமைப்பு, நிர்வாகம் ஆகிய துறைகளில் முன்னூறு ஆண்டுகளாக சுதந்திரமாகச் செயல்பட்டு வந்தது. 1997இல் நடைபெற்ற வாக்கெடுப்பை யடுத்து அங்கு மீண்டும் பாராளுமன்றம் அமைக்கப்பட்டு தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், 2011ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஸ்கொட்லாந்து தேசிய கட்சி ஆட்சியைப் பிடித்தது. இதையடுத்து, பிரிட்டனிலிருந்து முற்றிலும் சுதந்திரம் பெற்ற தனி நாடாக வேண்டுமா என்பதற்கான வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது.
ஸ்கொட்லாந்து பகுதியில், எண்ணெய் வளம் உள்ளிட்ட ஏராளமான இயற்கை வளங்கள் உள்ளன. பிரிவினைக்கு ஆதர வாகப் பெரும்பான்மை வாக்கு இருக்கு மானால், முழுமையான சுதந்திரம் பெறு வதற்கான நடவடிக்கைகள் நிறைவேற 18 மாதங்களாகும். ஸ்கொட்லாந்து சுதந்திரம் பெறும்பட்சத் தில் பிரிட்டனின் சர்வதேச சக்தி கேள்விக் குறியாகிவிடும். பிரிட்டனின் மூன்றில் ஒரு நிலப்பகுதியை ஸ்கொட்லாந்து பிரதிநிதித் துவப்படுத்துகிறது. இந்நிலையில் ஸ்கொட் லாந்து பிரிந்து சென்றால் பிரிட்டனின் வெளி நாட்டு மற்றும் பாதுகாப்பு கொள்கைகளில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
ஸ்கொட்லாந்து விவகாரம் குறித்து அமெரிக்கா உத்தியோகபு+ர்வமாக ஒருசில வார்த்தைகளையே வெளியிட்டிருந்தது. அமெரிக்காவின் மிக நட்பு மிக்க நாடான பிரிட்டன் தனது ஒன்றியத்தின் கீழ் சிறப்பாக செயற்பட்டு வந்தது என்று அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கடந்த ஜ{ன் மாதம் குறிப்பிட்டிருந்தார். "எமக்கு எப்போதும் எஞ்சியிருக்கும் மிக நெருங்கிய நட்பு நாடு ஒன்றியத்துடனும், வல்ல மையுடனும், பயனுள்ளதாகவும் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்பதில் நாம் அதிக கவனம் செலுத்துகிறோம்" என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இலங்கைத் தலைநகர் கொழும்பில் நடைபெறும் ஆசிய அரசியல் கட்சிகள் மாநாடு

ராஜபக்சே மாநாட்டில் பாஜக மேலிடப் பிரதிநிதிகள் பங்கேற்பு: சு.சுவாமி தகவல்இலங்கைத் தலைநகர் கொழும்பில் நடைபெறும் ஆசிய அரசியல் கட்சிகள் மாநாட்டில் பங்கேற்பதற்காக பாஜக தேசியப் பொதுச்செயலாளர் முரளிதரராவ், பாஜக வெளிநாட்டுப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் விஜய் ஜாலி ஆகியோர் புதன்கிழமை இலங்கைக்கு புறப்பட்டுச் சென்றனர்.
இலங்கை தலைநகர் கொழும்பில் செப்டம்பர் 18ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை ஆசிய அரசியல் கட்சிகளின் சர்வதேச மாநாடு நடைபெறவுள்ளது. வியாழக்கிழமை நடைபெறும் தொடக்க விழாவில் இலங்கை அதிபர் ராஜபட்ச பங்கேற்று உரையாற்றுகிறார்.
இந்த மாநாட்டில் பாஜக சார்பில் முரளிதரராவ், விஜய் ஜாலி ஆகியோர் பங்கேற்கின்றனர். இதற்காக அவர்கள் இருவரும் புதன்கிழமை மாலை கொழும்பு புறப்பட்டுச் சென்றனர்.
இந்த மாநாட்டில் 40 ஆசிய நாடுகளைச் சேர்ந்த 360 அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். ஆசியாவின் வளர்ச்சி குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட இருப்பதாக பாஜக தெரிவித்துள்ளது.
இந்த மாநாட்டில் பாஜக தலைவர்கள் பங்கேற்கும் தகவலை அவர்கள் கொழும்பு புறப்பட்டுச் சென்ற பிறகே பாஜக வெளியிட்டுள்ளது. இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைகளுக்காக ராஜபட்சவை தண்டிக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், பாஜக தலைமையிலான மத்திய அரசு அந்நாட்டுடன் நல்லுறவைப் பேணி வருகிறது.
தில்லியில் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற விழாவில் இலங்கை அதிபர் ராஜபட்ச பங்கேற்றதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில், பாஜ தலைவர்களின் இலங்கை பயணம் குறித்து தமிழக பாஜக தலைவர்களிடம் கேட்டபோது, ஆசிய அரசியல் கட்சிகளின் மாநாட்டில் பங்கேற்பதற்காகவே பாஜக தலைவர்கள் இலங்கை சென்றுள்ளனர். அதில் எந்தத் தவறும் இல்லை என்றனர்.

இலங்கையில் துறைமுக நகரம் அமைக்கிறது சீனா

இலங்கையில் 140 கோடி டாலர்கள் (சுமார் ரூ.8,500 கோடி) முதலீட்டில் துறைமுக நகரம் ஒன்றை சீனா அமைக்கிறது.
இலங்கையில், மேற்கொள்ளப்படும் மிக அதிக அளவிலான நேரடி அன்னிய முதலீடு இதுவாகும்.
இலங்கை தலைநகர் கொழும்புக்கு அருகில், கடலில் செயற்கையாக அமைக்கப்படும் தீவு ஒன்றில் இந்த துறைமுக நகரம் அமைக்கப்படவுள்ளது.
இதற்கான கட்டுமானப் பணிகளை சீன அதிபர் ஜீ ஜின்பிங் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து இலங்கை அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த துறைமுகம் உலகம் முழுவதுமிலிருந்து 500 கோடி டாலர்களை (ரூ.30,400 கோடி) ஈர்க்கக்கூடியது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
583 ஏக்கர் பரப்பளவில் அமையும் இந்தத் துறைமுகம், ஆயிரக்கணக்கோருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு அளிக்கும் எனக் கூறப்படுகிறது.

"எந்தச் சூழலிலும் நண்பன்': முன்னதாக, இலங்கை நாடாளுமன்ற அவைத் தலைவர் சமால் ராஜபட்சேவை சந்தித்த ஜீ ஜின்பிங், ""எந்தச் சூழலிலும் சீனாவுக்கு ஆதரவளிக்கும் நட்பு நாடு இலங்கை'' என்று கூறினார்.
தைவான், திபெத் ஆகிய விவகாரங்களில் சீனாவுக்கு இலங்கை அளித்து வரும் ஆதரவுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.
முன்னதாக, இலங்கை அதிபர் ராஜபட்சவுடன் பாதுகாப்பு, கடல் கண்காணிப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பு மேற்கொள்வதற்கான ஒப்பந்தங்களை அவர் செவ்வாய்க்கிழமை மேற்கொண்டார்.
மூன்று நாள் பயணமாக இந்தியா வருவதற்கு முன்பாக, அவர் செவ்வாய், புதன்கிழமைகளில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.